பெருங்குடல் புற்றுநோய் – இதற்கான ஆபத்தைப் புறக்கணிக்காதீர்கள்
பெருங்குடல் புற்றுநோய் என்பது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வரும் ஒரு கொடிய நோயாகும்; இதற்கான காரணம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் ஆகும். இந்தப் புற்றுநோய் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றைக் கொண்ட செரிமான அமைப்பைத் தாக்குகிறது.பெருங்குடல் புற்றுநோய் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது, அத்துடன் வயதாக ஆக இதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. இது பெருங்குடலில், பொதுவாக ஒரு திசு வளர்ச்சியிலிருந்து (பாலிப்) எழும் வளர்ச்சியாகும். பாலிப் என்பது பொதுவாக காலிஃபிளவரின் சிறிய பூக்களைப் போல காட்சியளிக்கும், சில சமயங்களில் தட்டையாகவும் இருக்கும். இது பரவும் போது உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்தும்.
பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
இதற்கான சுட்டிக்காட்டக்கூடிய குறிப்பிட்ட காரணங்கள் என்று எதுவும் இல்லை; ஆனாலும் மரபியல், உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் போன்ற சில காரணிகள் பெருங்குடல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துகளுடன் தொடர்புடையவை.
லிஞ்ச் சிண்ட்ரோம் (Lynch syndrome) மற்றும் குடும்ப-அடிப்படையிலான அடினோமாட்டஸ் பாலிபோசிஸ் (adenomatous polyposis) என்ற இரண்டு மரபணு நோய்க்குறிகள் இந்த நோயுடன் தொடர்புடையவை.
அடிக்கடி சிவப்பு இறைச்சி உண்பது இதற்கான ஆபத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் சிவப்பு இறைச்சியை உண்ணும் அளவுக்கு கிழக்கு நாடுகள் உண்பதில்லை என்பதால் இங்கு பெருங்குடல் புற்றுநோய் அரிதாகக் காணப்படுகிறது.
அதிக அளவு மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை புற்றுநோய் செல்களைத் தூண்டுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், உடல் பருமன், போதுமான உடற்பயிற்சி அல்லாத அதிக-செயல்பாடற்ற வாழ்க்கைமுறை, அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற சுகாதார காரணிகளின் காரணமாக பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
நாம் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
பெருங்குடல் அல்லது மலக்குடலில் புற்றுநோய் செல்கள் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தலாம்:
- குடல் இயக்கத்தின் போது இரத்தம் வெளிப்படுதல்.
- எடை இழப்பு.
- லேசானது முதல் தீவிரமான அளவிலான வயிற்று வலி.
- மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு.
- சீரற்ற குடல் இயக்கங்கள்.
பெருங்குடல் புற்றுநோய் குறித்த வருத்தமான விஷயம் என்னவென்றால், நோய் மிகவும் முற்றிய நிலையை அடையும் வரை இதன் அறிகுறிகள் தெரிவதில்லை. அதனால் 50 முதல் 75 வயதுள்ள நபர்கள் அவ்வப்போது முறையாக ஸ்கிரீனிங் செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஆபத்து அதிகம் என்பதால் அவர்கள் 45 வயதிலேயே ஸ்கிரீனிங் செய்யத் தொடங்கலாம்.
பெருங்குடல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்:
ஸ்கிரீனிங் சோதனையில் பின்வருபவை அடங்கும்; FOBT- மல இரத்தப் பரிசோதனை எனப்படும் வீட்டில் செய்யக்கூடிய மலப் பரிசோதனை; ஃப்ளெக்ஸ் சிக் - நெகிழ்வான சிக்மாய்டோஸ்கோபி; மற்றும் கொலோனோஸ்கோபி. மல மாதிரிகளில் இரத்த அணுக்கள் இருப்பதை இந்த சோதனைகள் சோதிக்கின்றன, அத்துடன் இது ஆண்டுக்கொரு முறை செய்யப்பட வேண்டும்.
ஃப்ளெக்ஸ் சிக் மற்றும் கொலோனோஸ்கோபி செயல்முறையில், திசு வளர்ச்சி (பாலிப்) இருப்பதைக் கண்டறிய, மலக்குடல் வழியாக ஒரு மெல்லிய குழாய் பெருங்குடலில் செருகப்படுகிறது. பெருங்குடல் முழுவதுமாக பரிசோதிக்கப்படுகிறது. செயல்முறைக்கு முன் மலத்தை முற்றிலுமாக அகற்ற இனிமா கொடுக்கப்படுகிறது. கொலோனோஸ்கோபி பொதுவாக மயக்க மருந்து கொடுத்த நிலையில் செய்யப்படுகிறது, செயல்முறைக்குப் பிறகு நோயாளி சோர்வாக உணரலாம், அத்துடன் அவர் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டியிருக்கலாம் மற்றும் வீட்டிற்கு திரும்ப செல்ல அவருக்கு உதவி தேவைப்படும்.
செயல்திறன் மிக்க மற்றும் சரியான நேரத்தில் செய்யப்பட்ட ஸ்கிரீனிங் சோதனைகள் காரணமாக 60%க்கும் அதிகமான பெருங்குடல் புற்றுநோய் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை:
ஆரம்ப நிலை புற்றுநோய் அளவில் சிறியதாகவும், ஓரிடத்திலும் இருக்கும், அதற்கு குறைந்த அளவிலான குறுக்கீட்டுச் சிகிச்சை தேவைப்படுகிறது. சிறிய கட்டிகளை திறம்பட அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படலாம் மற்றும் மீதமிருக்கும் செல்களை அழிக்க கீமோதெரபி செய்யப்படலாம். நோய் முற்றிய நிலையில், பாதிக்கப்பட்ட பெருங்குடலை அகற்றி அதை மலக்குடலுடன் மீண்டும் இணைக்க வேண்டும். மாற்று சிகிச்சைகளும், மேம்பட்ட உணவுமுறைப் பழக்கங்களும் நோயாளியின் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தலாம்.
No comments:
Post a Comment